சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல்
கண்டமங்கலம் : விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கெங்கராம்பாளையம் டோல்கேட் அருகே தோண்டப்பட்ட சாலையை சீரமைக்காததைக் கண்டித்து எல்.ஆர்.பாளையம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் எல்.ஆர்.பாளையம் செல்லும் சாலையை, நான்கு வழச்சாலையுடன் இணைக்க 50 மீட்டர் துாரத்திற்கு ஜே.சி.பி., மூலம் தோண்டப்பட்டு பல மாதங்கள் கடந்தும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த சாலை நடுவே 2 ஆடி ஆழத்திற்கு பள்ளம் எற்பட்டு மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.சாலையை சீரமைக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த எல்.ஆர்.பாளையம் கிராம மக்கள் நேற்று மதகடிப்பட்டில், தமிழக - புதுச்சேரி எல்லைப்பகுதி நான்கு வழிச்சாலையில் பிற்பகல் 2:00 மணிக்கு ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.வளவனுார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் 2:30 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.