மாணவர் கொலை வழக்கு இருவருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
விழுப்புரம், : கல்லுாரி மாணவர் கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதுவிழுப்புரம் அடுத்த கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் ராமன், 22; கடந்த ஆண்டு விழுப்புரம் அரசு கல்லுாரியில் படித்து வந்த இவர், ஒரு பெண்ணிடம் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்தார்.இதனையறிந்த அந்த பெண்ணின் உறவினரான, விழுப்புரம் கே.கே.ரோடு ராஜிவ்காந்தி நகர் வெங்கடேசன் மகன் லாலிகார்த்திக்,30; உறவினர்களான ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் சத்தியராஜ், 28; ரவீந்திரன், 40; ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி ராஜனை தாக்கினார்.அன்று மாலை சமாதானம் பேச ராமனை, ஒருகோடி கிராமம் சிவன் கோவில் அருகே வரவழைத்த லாலிகார்த்திக், சத்தியராஜ் மூவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த லாலிகார்த்திக், சத்தியராஜ் இருவரும் சேர்ந்து மதுபாட்டிலை உடைத்து, ராஜனை குத்தி கொலை செய்தனர்.இதுதொடர்பாக லாலிகார்த்திக், சத்தியராஜ், ரவீந்திரன் ஆகியோரை கைது செய்த காணை போலீசார், அவர்கள் மீது விழுப்புரம் எஸ்.சி., - எஸ்.டி. கோர்ட்டில் கொலை வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கோதண்டபாணி ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட லாலிகார்த்திக், சத்தியராஜ் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், ரவீந்திரனை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.அதனையொட்டி லாலி கார்த்திக், சத்தியராஜ் இருவரும் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.