கிடங்கல் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
திண்டிவனம்: கிடங்கல் ஏரியில், படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையம் பின்புறம், 500 ஏக்கர் பரப்பளவில் கிடங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மழைக்காலங்களில் இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், ரயில்வே மேம்பாலம் கீழ் உள்ள வாய்க்கால் வழியாக, நாகலாபுரம், கர்ணாவூர் பாட்டை வழியாக செல்கிறது. இந்த ஏரியின் பெரும் பகுதியில், ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளன. மேலும், ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் தொடர்ந்து ஏரி மாசுபட்டு வருகிறது. அதனால் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.