மாவட்டத்தில் முக்கிய பிரச்னைகள் தீர்க்கப்படுமா?: அரசு அதிகாரிகளின் சிறப்பு கவனம் தேவை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய பிரச்னைகள், குறித்து எம்.எல்.ஏ.,க்கள் மூலம் முதல்வர் கவனத்திற்கு சென்ற பிரச்னைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளது. மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில், நீண்ட கால கோரிக்கைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களின் தொடர்ந்து அதிகாரிகள் மனு கொடுத்து வருகின்றனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில், நவீன கலையரங்கம் அமைக்க வேண்டும்.விழுப்புரம் - புதுச்சேரி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசு இடம் ஒதுக்கித் தந்தால் பரிசீலனை செய்யலாம் என தெற்கு ரயில்வே, தங்கள் தரப்பில் இருந்து முன்னரே தெரிவித்திருந்தது. அதன்படி இடம் ஒதுக்கித் தர வேண்டும்.கிடப்பில் உள்ள திண்டிவனம் - செஞ்சி- திருவண்ணாமலை புதிய ரயில்வே திட்டத்தை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திண்டிவனம் - வானுார் இடையே உள்ள எறையானுார் கிராமத்தில், அரசு வேளாண் கல்லுாரி அமைக்க வேண்டும். ஆவணிப்பூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.விக்கிரவாண்டி பகுதியில், அரசு தொழிற்பயிற்சி மையம், சிப்காட் தொழிற்சாலை அமைத்திட வேண்டும். விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செஞ்சி, திருக்கோவிலுார் பகுதி மக்கள் தடையின்றி செல்ல வசதியாக முண்டியம்பாக்கம் - ஒரத்துார் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். செஞ்சி அருகில் உள்ள பாக்கம் - கெங்கவரம் பகுதியில் வன விலங்கு சரணாலயம் அமைப்பது குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும்.மீனவ மக்கள் பயனடைய மரக்காணம் பேரூராட்சி அழகன்குப்பம் முதல், புத்துப்பட்டு ஊராட்சி முதலியார்குப்பம் வரை கடற்கரையில், துாண்டில் வளைவு அமைக்க வேண்டும். வளர்ந்து வரும் திருச்சிற்றம்பலம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.செஞ்சி கோட்டையை முக்கிய சுற்றுலா மையமாக அறிவித்து, கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும். செஞ்சி 'பி' ஏரி மற்றும் செஞ்சிக் கோட்டை செட்டிகுளத்தில் படகு சவாரி திட்டத்தை கொண்டு வர வேண்டும்.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலை, ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவித்து, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேல்மலையனுாரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை துவங்கிட வேண்டும்.கண்டாச்சிபுரம் மயிலம், ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் சவுக்கு அதிகளவில் பயிரிடப்படுவதால், காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும். இத்திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, நடைமுறைச் சிக்கல்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மாவட்டத்தில் தொகுதிவாரியாக நீண்ட காலமாக தீர்க்கப்படாத 10 முக்கிய பிரச்னைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டன. இந்த பிரச்னைகள் பற்றி எம்.எல்.ஏ.,க்கள் மூலம், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை தீர்ப்பதற்கு, அரசு அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்.