உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரிகளில் மண் எடுத்து விற்பனை செய்வது... தடுக்கப்படுமா? அதிகாரிகளால் அரசுக்கு வருவாய் இழப்பு

ஏரிகளில் மண் எடுத்து விற்பனை செய்வது... தடுக்கப்படுமா? அதிகாரிகளால் அரசுக்கு வருவாய் இழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரி மண்ணை விதிமுறை மீறி செங்கல் சூளைக்கு அள்ளிச் சென்றும், தனிநபர்கள் விற்பனை செய்யவதையும் தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 505 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 782 ஏரிகளும் உள்ளது. இந்த ஏரிகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் அடிப்பதற்கும், வீடு கட்டுவதற்கு கிராவல் மண் எடுப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. செங்கல் சூளைக்கு ஏரிகளில் இருந்து மண் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.ஏரிகளில் மண் எடுப்பதற்கு வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் கடிதம் பெற்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். ஆனால், மாவட்டத்தில் ஏரிகளில் மண் அள்ளும் விதிமுறையை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.விவசாய நிலம் மற்றும் வீடு கட்டுவதற்கு மண் எடுப்பதாக அனுமதி வாங்குகின்றனர். பின், செங்கல் சூளைக்கு மண் எடுத்து மலைபோன்று குவித்து வைக்கின்றனர்.ஒரு ஏரியில் இருந்து மண் எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கும்போது குறிப்பிட்ட யூனிட் மட்டுமே எடுக்க வேண்டும். இதற்காக எத்தனை வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், 3 அடி ஆழத்திற்கு மட்டுமே அள்ள வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 'ட்ரிப் ஷீட்' வழங்குகின்றனர்.ஆனால், இந்த விதிமுறையை மாவட்டத்தில் யாரும் பின்பற்றுவதில்லை. மாறாக, அனுமதி வழங்கும் யூனிட்டை விட கூடுதலாகவும், விதிமுறையை மீறி அதிகளவிலான வாகனங்களில் மண் எடுக்கின்றனர். இதனால், ஏரிகளில் கிடுகிடு பள்ளம் தோண்டுகின்றனர். இதில், தங்கள் தேவைக்கு போக, அனுமதி சீட்டு பெறுபவர்கள் மண்ணை வெளி நபர்களுக்கு ஒரு டிராக்டர் 500 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.இதேபோன்று, தங்கள் நிலங்களில் மண் எடுத்து செங்கல் சூளை தொழில் செய்பவர்களும் இதை தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் விவசாய நிலங்களில் தோண்டிய பள்ளத்தை மூடுவதற்கும், ஏரிகளில் இருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனால், ஏரிகளில் ராட்சத பள்ளங்களை ஏற்படுத்துகின்றனர்.இதை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல், அவர்களுக்கு கரிசனம் காட்டி வருகின்றனர். காவல் துறையினர் தடுக்க சென்றால், அனுமதி சீட்டை காட்டி தப்பிக்கின்றனர்.இதனால், அரசிற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான ஏரிகளில் இருந்து மண் எடுத்து தனிநபர்களும், செங்கல் சூளை உரிமையாளர்களும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.எனவே, மாவட்ட ஏரிகளில் வண்டல் மற்றும் கிராவல் மண் அனுமதியை பின்பற்றுகின்றனரா என கண்காணிக்கவும், தவறாக பயன்படுத்தும் நபர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sundaran
ஜூலை 21, 2025 20:09

தேர்தல் வருகிறது .அதற்குள் உடன் பிறப்பு சம்பாதிக்க வேண்டும் ஓட்டுக்கு காசு kodukka வேண்டும் எனவே இப்படி தான் சம்பாதிக்க வேண்டும்