சுற்றுச்சாலை 3ம் கட்ட பணிகளுக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு விரைவில் பணிகளை துவக்க எதிர்பார்ப்பு
சிவகாசி: சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் 6.2 கிலோ மீட்டர் துார மூன்றாம் கட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகளை துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்க ஈஞ்சார், வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, ஆனையூர், கொங்கலாபுரம், திருத்தங்கல், ஒரு லிட்டர் 10 வருவாய் கிராமங்களை சேர்ந்த 82 நில உரிமையாளர்களிடம் இருந்து 132.8 ஹெக்டேர் பட்டா நிலம், அரசு நிலம் 14.6 ஹெக்டேர் என 147.4 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி, எரிச்சநத்தம் - சிவகாசி, விருதுநகர் - சிவகாசி, சாத்துார் - சிவகாசி, சிவகாசி - கழுகுமலை, சிவகாசி - ஆலங்குளம், சிவகாசி - வெம்பக்கோட்டை ஆகிய ரோடுகளை இணைத்து 33.52 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுவட்டச் சாலையை மூன்று பிரிவுகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி - எரிச்சநத்தம், சிவகாசி - விருதுநகர் ரோடுகளை இணைக்கும் வகையில் பூவநாதபுரம் - வடமலாபுரம் சந்திப்பு இடையே 9.92 கிலோ மீட்டர் துாரத்திற்கு ரூ.120 கோடியில் சுற்றுச் சாலை அமைக்கும் பணி முடிந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாம் கட்டமாக விஸ்வநத்தம் - வெங்கடாச்சலபுரம் , சிவகாசி, - கழுகுமலை, சிவகாசி - ஆலங்குளம் ரோடுகளை இணைக்கும் வகையில் 6.7 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்க ரூ.58.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் அரசின் பட்ஜெட்டில் மூன்றாம் கட்டமாக சிவகாசி - சாத்துார், சிவகாசி - கன்னிசேரி ரோடுகளை இணைக்கும் வகையில் 6.2 கிலோ மீட்டருக்கு சுற்றுச்சாலை அமைக்க ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உடனடியாக பணிகளை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்: மூன்றாம் கட்ட சுற்றுச்சாலைக்கு நிதி ஒதுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாத்துார் ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்க திட்டமிட்ட நிலையில் சாத்துார் சிவகாசி ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் முடிந்தவுடன் இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் துவங்கும் என்றனர்.