உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் தேவை துரிதம்: தாமிரபரணி குடிநீர் வருகையால் மக்கள் ஆர்வம்

புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் தேவை துரிதம்: தாமிரபரணி குடிநீர் வருகையால் மக்கள் ஆர்வம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தாமிரபரணி வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வருவதால், துரிதமாக புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்க செண்பக தோப்பு பேயனாற்று பகுதியில் 17 ஆழ்துளை ,7 திறந்த வெளி கிணறுகள் உள்ளன.இதன் மூலம் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் கிடைத்தது. கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சியால் 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 2007 நவம்பரில் 29 கோடி ரூபாயில் நெல்லை மாவட்டம் முக்கூடலில் இருந்து தண்ணீர் கொண்டு வர, தாமிரபரணி வாசுதேவ நல்லூர் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஸ்ரீவி., நகராட்சிக்கு தினம் 72 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் அக்.7ம் தேதி முதல் பெறப்பட்டன.வீடுகளுக்கு 5000 , வணிக நிறுவனங்களுக்கு 10 ஆயிரம், தொழிற்சாலைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் முன் வைப்பு தொகையாக, பதிவு கட்டணமாக 100 ரூபாய்வசூல் செய்யபட்டது. கடந்த மார்ச் 19 முதல் தண்ணீரும் வந்தது. இதன் மூலம் தினம் 45 லட்சம் லிட்டர், செண்பக தோப்பு பேயனாற்றின் மூலம் 22லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைத்து வருகிறது. இதனால் ஒரு நாள் விட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனாலும் இங்கு குடிநீர் இணைப்புக்காக காத்திருப்பவர்கள் 612, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து நேற்று வரை பதிவு செய்தவர்கள் 3730. இவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால், குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துவங்கியது. தற்போது குறைவான ஊழியர்களே உள்ளதால் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தாமதமாக நடந்து வருகிறது. நகராட்சி கமிஷனர் முத்துக்கண்ணு கூறியதாவது: தாமிரபரணி தண்ணீர் வருவதால் பிரச்னையின்றி குடிநீர் வருகிறது. 2004 வரை பணம் செலுத்தி காத்திருப்பவர்கள், மீதி தொகையை செலுத்த நோட்டீஸ் அனுப்பபட்டு வருகிறது. ஆனால் அவர்கள் ஆர்வமில்லாமல் இருந்து வருகின்றனர். பணம் செலுத்தியவர்களுக்கு புதிய இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. குறுகிய காலத்திற்குள் அனைத்து இணைப்புகளும் வழங்கப்பட்டு விடும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ