3வது புத்தகத் திருவிழா இலச்சினை வெளியீடு
விருதுநகர் : விருதுநகரில் 3வது புத்தகத் திருவிழா செப். 27 முதல் துவங்க உள்ள நிலையில் மரமும், மரபும் என்ற தலைப்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இலச்சினை வெளியிடப்பட்டது.3வது விருதுநகர் புத்தகத் திருவிழா, விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் செப். 27 முதல் அக். 7 வரை 11 நாட்களுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு “மரமும் மரபும்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழலும் தொன்மையும் என்ற கருத்தை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட இலச்சினையை கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டார்.பின் அவர் கூறியதாவது: மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, 11 நாட்களுக்கு காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.இதில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு, சிறப்பு பட்டிமன்றங்கள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கி உள்ளன.இதில் அனைவரும் பங்கேற்று புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களில் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம், என்றார்.