அனுமதித்ததோ 500, அள்ளியதோ 5000... கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியா பறிமுதல் செய்த 8 லாரிகள் மாயம்
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் 500 கியூபிக் மீட்டருக்கு மட்டுமே கிராவல் அள்ள அனுமதித்த நிலையில், 5 ஆயிரம் கியூபிக் மீட்டர் வரை அள்ளப்பட்டுள்ளது. மணல் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்டதில் 8 லாரிகள் மாயமானதால் இதில் ஆளும்கட்சி தொடர்பு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் ஜன. 28ல் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சாத்துார் வேப்பிலைப்பட்டியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது.கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்துார் தாசில்தார் ராமநாதன், துணை தாசில்தார் நவநீதன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வி.ஏ.ஓ. அஜீதா, கிராம உதவியாளர் குருசாமி உள்ளிட்ட 5 வருவாய்த்துறையினரும், நீர்வளத்துறை உதவி பொறியாளர், வேளாண் உதவி அலுவலர் முத்துக்குரு என 7 பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.விதிமீறலை கண்டறிய தவறிய சாத்துார் ஆர்.டி.ஓ., சிவக்குமாரிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 500 கியூபிக் மீட்டர் மட்டுமே அள்ள அனுமதி உண்டு. ஆனால் 5 ஆயிரம் கியூபிக் மீட்டர் வரை அள்ளி உள்ளது கனிம வளத்துறை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்த சந்தேகங்கள்
ஜன. 28ல் பறிமுதல் செய்த 12 லாரிகளில் 4 மட்டுமே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ளது. மற்றவை மாயமாகிவிட்டன.இந்த கனிமவள கொள்ளை நடந்த பகுதியில் உள்ள வச்சக்காரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு போலீஸ் ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படவில்லை. கனிமவள கொள்ளைக்கு துணை போவதாக இந்த ஸ்டேஷன் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.'எனக்கும் இதற்கும் தொடர்பில்லை, எனது ஆவணங்களை தவறாக பயன்படுத்தி உள்ளனர்' என சிவரஞ்சனி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அவர் எப்படி வழக்கில் சிக்கினார் என்பதற்கான பதில் இல்லை.பறிமுதல் நடவடிக்கையின் போது அதிகாரி ஒருவரை மண் அள்ளியவர்கள் தள்ளிவிட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதியவில்லை.இந்நிலையில் வச்சக்காரப்பட்டியில் சிவரஞ்சனி மீது பதிவு செய்த எப்.ஐ.ஆர்., எண் 45ஐ குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிலர் முன் ஜாமின் பெற்றுள்ளனர். அதில் சிவரஞ்சனி பெயர் இல்லை. வழக்கில் பெயர் இல்லாதவர்களே பெற்றுள்ளனர். அவர்கள் லாரி டிரைவர்களா, உரிமையாளர்களா என்பதும் தெரியவில்லை. அவிழாத முடிச்சுகள்
ஒரு புல எண்ணில் 500 கனமீட்டர் மண் அள்ள ஒரு முறை மட்டுமே வருவாய்த்துறையினர் அனுமதிக்க முடியும். ஆனால் இங்கு ஒரே புல எண்ணிற்கு 5 முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கிய அதிகாரிக்கு இருந்த அரசியல் அழுத்தத்தை கணக்கில்கொள்ளாமல் அவர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் இருந்த அரசியல் பின்புலத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவை போன்று 10 மடங்கு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கனிம வளத்துறையினர் கூறுகின்றனர். இப்படி இந்த திருட்டில் பல்வேறு அவிழாத முடிச்சுகள் உள்ளன.இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 பேரிடமும் விசாரிக்க டி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவின் விசாரணையில் அரசியல் அழுத்தங்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், பினாமிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.