விஜய கரிசல்குளம் அகழாய்வில் தென்பட்ட முழுமையான சுவர்
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3 ம் கட்ட அகழாய்வில் தொழிற்கூடம் , கட்டடம் இருந்ததற்கு அடையாளமாக முழுமையான செங்கல் சுவர் தென்பட்டது. விஜய கரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி ,கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, அகல் விளக்கு, எலும்புகள், சங்கு வளையல்கள் என 1600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே தோண்டப்பட்ட நான்கு குழிகளில் செங்கல் கட்டுமான தென்பட்டது. இவை முழுமையாக இல்லாத நிலையில் எட்டு செ.மீ., ஆழம் முதல் ஒரு மீ., ஆழம் வரை நான்கு அடி பரப்பளவில் இருந்தது. சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் கட்டடம் இருந்ததற்கு அடையாளமாக முழுமையான சுவர் தென்பட்டது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில்'' ஏற்கனவே நான்கு குழிகளில் செங்கல் கட்டுமானம் சிதைந்த நிலையில் தென்பட்டது. ஆனால் தற்போது முழுமையான சுவர் தென்பட்டுள்ளது. எனவே இங்கு தொழிற்கூடம் நடத்தி முன்னோர்கள் வசித்தது உறுதியாகி உள்ளது என்றார்.