| ADDED : ஜூன் 01, 2024 04:09 AM
நரிக்குடி: இடிந்து ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள நரிக்குடி ஆண்டுகொண்டான் நிழற்குடையால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். பழைய நிழற்குடையை அப்புறப்படுத்தி, புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.நரிக்குடி ஆண்டுகொண்டான் கிராமத்தினர் வெளியூர்களுக்கு செல்ல நரிக்குடி திருப்புவனம் மெயின் ரோட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை கட்டப்பட்டது. ஆவரங்காடு, ஒட்டங்குளம் கிராமத்தினரும் 2 கி. மீ., தூரம் நடந்து ஆண்டுகொண்டான் ஊர் அருகே வந்து தான் பஸ் ஏறி செல்ல வேண்டும். இந்நிலையில் அங்குள்ள நிழற்குடையில் பயணிகள் பஸ் வரும் வரை காத்திருந்து சென்று வந்தனர். நாளடைவில் கட்டடம் சேதம் அடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிந்து படுமோசமாகி இடிந்து ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. வெயில், மழைக்கு பயணிகள் நிழற்குடையில் ஒதுங்கி நிற்க முடியாமல் தவித்து வருகின்றனர். வெயிலில் கால் கடுக்க காத்து நிற்கின்றனர். மழை நேரங்களில் நிழற்குடையில் ஒதுங்கினால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து, மழையில் நனைந்தே நிற்கின்றனர். வெயில், மழைக்கு பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிழற்குடை கட்ட வேண்டி பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பழைய நிழற்குடையை அப்புறப்படுத்தி, நவீன முறையில் புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பயணிகள் வலியுறுத்தினர்.