மன அமைதி பூங்காவில் பாழான புற்கள், குட்டிகளை ஈன்ற நாய்கள்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவனையில் நோயாளிகளின் நலனிற்காக திறக்கப்பட்ட மன அமைதி பூங்காவில், புற்கள் வளர தேவையான உயரத்தில் மண் கொட்ட முடியாததால் புற்கள் பாழாகி, நாய்கள் குட்டிகளை ஈன்று வசிக்கும் இடமாக மாறியுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் ஒரே அறைக்குள் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவர்கள் பரிசோதனைக்காக மட்டுமே அறையை விட்டு வெளியே வருகின்றனர். இப்படி ஒரே அறைக்குள் நீண்ட நாள்கள் இருப்பதால் ஏற்படும் மன நிலை பாதிப்பை தடுப்பதற்காக மருத்துவமனை முதல் தளத்தில் மன அமைதி பூங்கா மே 23ல் புத்தர் சிலையுடன், பூக்கும் தாவரங்களுடன் திறக்கப்பட்டது.இந்நிலையில் பூங்கா அமைந்துள்ள பகுதி முதல் தளமாக இருப்பதால் கான்கீரிட் தளத்தின் மீது இரண்டு ஓரங்களிலும் புற்கள் வளர தேவையான உயரத்திற்கு மண் கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது புற்களுக்கு தேவையான தண்ணீரை பாய்ச்சியும் வளரவில்லை.இதனால் தற்போது புற்கள் கருகி பாழாகி விட்டது. புத்தர் சிலை இருக்கும் இடத்திலும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் சிலை இருக்கும் இடத்தில் மண் மீது செயற்கை புற்களை வைக்கப்பட்டதால் பார்ப்பவர்களுக்கு பச்சை நிறம் பிரதிபலிக்கும் படி செய்யப்பட்டுள்ளது.இந்த செயற்கை புற்களை ஓரங்களில் வைக்க முடியவில்லை.மேலும் பூங்காவில் நாய் குட்டிகளை ஈன்று அங்கேயே வசிப்பதால் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பணியாளர்கள் திண்டாடுகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் சுற்றத்திரியும் 50க்கும் மேற்பட்ட நாய்கள், தற்போது 20 க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்று ஆங்காங்கே வசிக்கின்றன. இவை வசிக்கும் இடத்திற்கு அருகே செல்லும் பணியாளர்களை துாரத்தும் சம்பவங்கள் தினமும் நடக்கிறது.