சாட்சியாபுரம் தண்டவாளம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
சிவகாசி: சிவகாசி ரயில்வே மேம்பால பணியில் தண்டவாளம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதால் நாளை (செப்.15) முதல் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் மூடப்படுவதால் டூவீலர்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது. சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணி ஆக.16ல் துவங்கியது. இதையடுத்து சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் வழியாக செல்லும் கார், பஸ், சரக்கு வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. டூவீலர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் பணிகள் தொடங்க உள்ளது. இதனால் நாளை செப்.15 முதல் ரயில்வே கிராஸிங் முழுமையாக மூடப்பட உள்ளது. இதனால் டூவீலர்கள், ஆட்டோக்களும் மற்ற வாகனங்கள் செல்லும் மாற்றுப் பாதையிலேயே செல்ல வேண்டும்இதுகுறித்து டி.எஸ்.பி.,பாஸ்கர் கூறுகையில், சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கிய நிலையில் மக்களின் வசதிக்காக டூவீலர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளம் பகுதியில் பாலம் பணிகள் துவங்க உள்ளதால், சப் கலெக்டர் அறிவுறுத்தல் படி செப். 15 முதல் கேட் மூடப்பட்டு டூவீலர்கள் செல்ல முடியாது. எனவே டூவீலர்களில் செல்பவர்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும், என்றார்.