சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தள்ளுவண்டி கடைகள் பறிமுதல்
சிவகாசி: சிவகாசியில் மாநகராட்சி சார்பில் ரத வீதிகள், பஸ்டாண்டு ரோடு, சாத்துார் ரோடு, என்.ஆர்.கே.ஆர்.. ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.சிவகாசி ரத வீதிகள், பஸ் ஸ்டாண்ட் ரோடு சாத்துார் ரோடு, என்.ஆர்.கே.ஆர்., ரோட்டில் தள்ளுவண்டி கடைகள் உள்பட பல்வேறு கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதனால் போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, திட்டமிடுநர் மதியழகன், நகர அமைப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஒரு சில கடைகளின் உரிமையாளர்கள் தங்களது ஆக்கிரமங்களை தாங்களே அகற்றினர். ஆக்கிரமிப்பில் இருந்த தள்ளுவண்டி கடைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.கமிஷனர் கூறுகையில் , நகரில் எங்கு ஆக்கிரமிப்பு இருந்தாலும் பாரபட்சம் இன்றி உடனடியாக அகற்றப்படும். பறிமுதல் செய்யப்பட்ட தள்ளுவண்டிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.