டெண்டர் விட்டு 7 மாதங்களாகியும் பணி துவங்காமல் இழுபறி
காரியாபட்டி,: டெண்டர் விட்டு 7 மாதங்கள் ஆகியும் ஊருணியில் உள்ள கழிவு நீரை வெளியேற்றுவது யார் என்பதில் இழுபறி இருந்து வருகிறது. காலதாமதத்தால் துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு தொல்லையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.காரியாபட்டி கே.செவல்பட்டியில் 3 ஏக்கர் பரப்பளவில் ஊருணி உள்ளது. விவசாயம், கால்நடைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊருணி தற்போது காரியாபட்டியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கும் குளமாக மாறியது. கழிவு பொருட்கள் நிரம்பி, துர்நாற்றம் ஏற்பட்டு கொசு தொல்லையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிவு நீரை வெளியேற்றி ஊருணியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இதை ஏற்று ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நடைபாதை, படித்துறை, கழிவு நீரை ஊருணியில் தேங்காமால் வாறுகால் அமைத்து வெளியேற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. 7 மாதங்கள் ஆகியும் பணிகள்நடைபெறாமல் காலதாமதம் ஆகி வருகிறது. இதற்கு ஊருணியில் தேங்கியிருக்கும் கழிவு நீரை டெண்டர் எடுத்தவர்வெளியேற்றுவதா அல்லதுபேரூராட்சி நிர்வாகம் வெளியேற்றுவதா என்கிற பிரச்னை இருந்து வருகிறது. மக்களின் நலன் கருதி யாராவது ஒருவர் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் இருவரும் சேர்ந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ஊருணி எதிரில்கோர்ட் அமைந்துஉள்ளது. தினமும் ஏராளமானனோர் வந்து செல்கின்றனர். துர்நாற்றம்,புழுக்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவு நீரை வெளியேற்றும் பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி, பணிகளை விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.