பாராக மாறிய அம்மா உணவகம் அச்சத்தில் பெண் பணியாளர்கள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அம்மா உணவகம் மாலை நேரங்களில் குடி மகன்களின் பார் ஆக இருப்பதால் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளனர்.அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டின் கடைசி பகுதியில் அம்மா உணவகம் உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அம்மா உணவகத்திற்கு வருபவர்கள் சிரமப்பட்டு வர வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் அம்மா உணவகத்திற்கு முன்பு குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளை வீசி செல்கின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்டிற்கு உட்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதால் எந்த நேரமும் குடிமகன்கள் இங்கு சுற்றி திரிகின்றனர். இதனால் அம்மா உணவகத்தில் சாப்பிட வருபவர்கள் சிரமப்படுவதுடன், இங்கு வேலை செய்யும் பெண் பணியாளர்கள் பயத்துடன் வேலை செய்ய வேண்டி உள்ளது.உணவகம் வெளிப்பகுதியில் சுகாதார கேடாகவும் உள்ளது. நகராட்சியினர் அம்மா உணவகத்தின் முன்பு, துப்புரவு செய்ய வேண்டும். போலீசார் இந்தப் பகுதியில் சுற்றி தெரியும் குடிமகன்களை எச்சரிக்க வேண்டும்.