ஸ்ரீவில்லிபுத்துார்: நாளை முதல் 17 வரை 3 நாட்கள் தொடர் விடுமுறையால், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் அதிகளவில் காத்திருப்போர் பட்டியலில் பயணியர் உள்ளனர். தட்கலில் கூட டிக்கெட் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பயணியர் நலனை கருதி மதுரை, ராமநாதபுரம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.நாளையும், நாளை மறுநாளும் வார விடுமுறை. ஜூன் 17 பக்ரீத் பண்டிகை. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையால் சென்னையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் வந்து செல்லவும், ஜூன் 16 முகூர்த்த நாள் என்பதால் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லவும் ஏராளமான மக்கள் திட்டமிட்டுள்ளனர்.ஆனால் நாளை முதல் ஜூன் 24 வரை தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை, வந்தே பாரத், தேஜஸ், குருவாயூர், கொல்லம், அனந்தபுரி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், முத்து நகர், சிலம்பு, பொதிகை, கொச்சு வேலி, பாண்டியன் உட்பட அனைத்து ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலில் அதிகளவில் பயணிகள் உள்ளனர்.நேற்று காலை தட்கல் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு, வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டது. சில ரயில்களில் பிரிமியம் தட்கல் டிக்கெட் கூட கிடைக்கவில்லை. அதிக கட்டணம் கொண்ட தேஜஸ், வந்தே பாரத், கொச்சுவேலி ஏசி சிறப்பு ரயில்களிலும் கூட வெயிட்டிங் லிஸ்ட் நிலையுள்ளது.மதுரை, ராமநாதபுரம், நாகர்கோவில் இருந்து சென்னைக்கு சென்று வரவும், கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணியர் எதிர்பார்க்கின்றனர்.