* கண்மாய் காப்போம் . . .
அருப்புக்கோட்டை; துார்வாரத நீர்வரத்து ஓடை, வீடுகளில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் பாளையம்பட்டி குறவன் கண்மாய் உள்ளது.அருப்புக்கோட்டை அருகே பாலையம் பட்டி குறவன் கண்மாயில் உள்ள தண்ணீரில் குளித்தால் உடம்பில் அரிப்பு ஏற்படுவதுடன், கழிவு நீர் அதிக அளவில் விடப்படுவதால் தேங்கியுள்ள தண்ணீர் கெட்டு விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.பாலையம்பட்டியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குறவன் கண்மாய் உள்ளது. முன்பு, காட்டுப்பகுதிகளிலிருந்து வரும் மழைநீர் செம்மண் பூமியை கடந்து வரும் போது செம்மண் கலரில் வருகிறது. இதனால் கண்மாயின் மற்றொரு பகுதி செவல் கண்மாய் எனவும் அழைக்கப்படுகிறது. சுற்றியுள்ள 80 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி தந்தது. நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டன. பாலையம்பட்டியின் ஒரு பகுதிக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது. சுத்தமான தண்ணீராக இருந்ததால், மக்கள் இதில் குளிப்பர். நாளடைவில் கண்மாய் பராமரிப்பு இன்றி போனது. ஊரின் வளர்ச்சி, வீடுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் ஒட்டுமொத்த கழிவு நீரும் கண்மாயில் விடப்பட்டது. மேலும் கண்மாய் 20 ஆண்டுகளுக்கு மேலாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் கண்மாயில் ஆகாயத்தாமரை வளர்ந்தும், ஒருவித விஷ செடி பாசி போல் வளர்ந்து உள்ளது. இதில் கண்மாயில் உள்ள தண்ணீரின் தன்மை மாறி, குளித்தால் உடம்பில் அரிப்பு ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. குப்பை கொட்டப்பட்டும், விவசாய கழிவுகளை ரோடு ஓரங்களில் எரித்து அவற்றையும் கண்மாயில் கொட்டுகின்றனர். இதனால் கண்மாயில் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கண்மாய்க்கு மழை நீர் வரும் ஓடைகள் அனைத்தும் பராமரிப்பு இன்றி துார்ந்து போயின. ஒரு பகுதி ஓடைகள் ஊரில் உள்ள கழிவுநீர் விடப்படும் கால்வாயாக மாறிவிட்டது. கண்மாய் பாசிகள் படர்ந்து கடும் துர்நாற்றம் எடுக்கிறது. கண் மாயைச் சுற்றி ரோடு ஓர பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைத்தும், மற்றொரு பகுதி கரைகளை பலப்படுத்தும், கண்மாயில் கழிவுநீர் சேராத வகையில் மழை நீர் வரத்து ஓடையை சரி செய்ய வேண்டும். விஷ செடிகள் பாசிகளை அகற்ற வேண்டும். பயன் இல்லை
யோகீஸ்வரன், விவசாயி: குறவன் கண்மாயில் தண்ணீர் இருந்தும் விவசாயத்திற்கும், குளிக்கவும் பயன்படுத்த முடியாத அளவில் தண்ணீர் கெட்டு விட்டது, கண்மாய் தண்ணீரில் குளித்தால் உடம்பில் அரிப்பு ஏற்படுவது உடன், விவசாய பயிர்களுக்கு பாய்ச்சினால் செடிகள் பட்டு போகின்றன. கண்மாயில் தண்ணீர் இருந்தும் பயன் இல்லை. பராமரிப்பு அவசியம்
மங்காள், விவசாயி: குறவன் கண்மாய் தண்ணீரை ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தோம். கண்மாய் பராமரிப்பு இல்லாமல் போனதால் தண்ணீர் கெட்டு விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. கண்மாயில் பாசிகள், செடிகள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் பாம்புகள், விஷ பூச்சிகளின் புகலிடமாக உள்ளது. கண்மாயை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் சர்வ சாதாரணமாக புகுந்து விடுகிறது. கண்மாயை துார்வாரி செடிகள், முட் புதர்களை அகற்ற வேண்டும். கழிவுநீர் குளம்
ராமன், டிரைவர்: குறவன் குளம் கண்மாய்க்கு அருகில் தான் எனது வீடு உள்ளது. எனக்குத் தெரிந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய் துார் வாராமலும், பராமரிப்பு இன்றியும் உள்ளது. மழைநீர் வரத்து ஓடைகளில் தற்போது கழிவுநீர் தான் விடப்படுகிறது. கண்மாயில் பல பகுதிகளில் இருந்து கழிவுநீர் விடப்படுவதால் கண்மாய் கழிவு நீர் குளமாக மாறிவிட்டது. கழிவுநீர் விடப்படுவதை தடுக்க வேண்டும்.