உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நடைமேம்பாலத்தில் ஒருபுறத்தில் மட்டுமே செயல்படும் லிப்ட்; மறுபுறம் பணிகள் மந்தம் சிவகாசி ரயில் பயணிகள் சிரமம்

நடைமேம்பாலத்தில் ஒருபுறத்தில் மட்டுமே செயல்படும் லிப்ட்; மறுபுறம் பணிகள் மந்தம் சிவகாசி ரயில் பயணிகள் சிரமம்

சிவகாசி; சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் 2.0 திட்டத்தில் நடை மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட லிப்ட் ஒரு புறத்தில் மட்டுமே செயல்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் உள்ள சிறிய ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' திட்டம் 2022 டிச.ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் நீண்ட கால தேவையின் அடிப்படையில் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான ஓய்வு அறை, காத்திருப்பு அறை, கழிப்பறை, லிப்ட், எஸ்கலேட்டர், இலவச இணைய சேவை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நடை மேடை முழுவதும் மேற்கூரை அமைத்தல், ஒரு பொருள் ஒரு நிலையம் திட்டத்திற்கான விற்பனை நிலையம், அலங்கார வளைவு, வடிவமைப்பு மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சிவகாசி அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் 2வது நடைமேடையில் கூரை இல்லாதது காத்திருப்பு அறை இல்லாதது, போதிய தங்கும் அறை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அம்ரித் பாரத் ஸ்டேஷன் 2.0 திட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை சேர்க்கப்பட்டது.இதில் சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் முதற்கட்டமாக நடை மேம்பாலத்தில் இரு புறங்களிலும் லிப்ட் அமைக்கும் பணி 6 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல் நடைமேடையில் உள்ள லிப்ட் மட்டுமே செயல்படும் நிலையில், 2வது நடைமேடையில் உள்ள லிப்ட் பணிகள் முழுமையாக முடிவடையாமல் செயல்படவில்லை. இதனால் வயதான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் தினசரி காலை செங்கோட்டை -- - மயிலாடுதுறை, மதுரை ---- செங்கோட்டை ரயிலுக்கு கிராசிங் நடைபெறும் நிலையில் இரண்டாவது நடைமேடையில் லிப்ட் செயல்படாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே விரைந்து இப்பணிகளை முடித்து இரண்டாவது நடைமேடையிலும் லிப்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை