உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் இல்லை, பராமரிப்பு இல்லாத கண்மாய்; அவதியில் தெற்குநத்தம் மக்கள்

குடிநீர் இல்லை, பராமரிப்பு இல்லாத கண்மாய்; அவதியில் தெற்குநத்தம் மக்கள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே தெற்கு நத்தத்தில் ஊராட்சி குடிநீர் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஊரில் உள்ள பெரிய கண்மாய் தூர் வாரப்படாமலும் ஆக்கிரமிப்பிலும் உள்ளது.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வடக்குநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது தெற்குநத்தம் கிராமம். இங்கு பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஊரில் உள்ள வி. ஏ.ஓ., கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ரேஷன் கடையும் மோசமான நிலையில் இருக்கிறது. ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் உப்புத் தன்மையுடன் உள்ளது.ஊருணிக்கு அருகில் உள்ள பொது கிணற்றில் உள்ள தண்ணீரைத் தான் குடிநீராக பயன்படுத்துகின்றனர். கிணற்றை மூடி போட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும்.திறந்தவெளியில் இருப்பதால் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. ஊரின் பல தெருக்களுக்கு வாறுகால், ரோடுகள் போட வேண்டும். இங்குள்ள பெரிய கண்மாய்க்கு 3 மடைகள் உள்ளது. மடைகள் சேதமடைந்து ஷட்டர் பழுதாகி இருக்கிறது.மழைக்காலங்களில் கண்மாயில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியவுடன் உபரி நீரை திறந்து விடுவதற்கு உரிய மடை பழுதாக இருப்பதால் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறி ஊருக்குள் வந்துவிடும் அபாயம் உள்ளது. மடைகளை சரி செய்து ஷட்டர்களின் பழுதை நீக்க வேண்டும். கண்மாயின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மயானம் பராமரிப்பின்றி உள்ளது. இதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மயானத்திற்கு செல்லும் பாதையில் மின் கம்பிகள் தொங்கிக்கொண்டு இருப்பதால் மக்கள் பயத்துடன் செல்கின்றனர்.

குடிநீர் இல்லை

நடராஜன், விவசாயி: தெற்குநத்தத்தில் பாதுகாக்கப்பட்ட ஊராட்சி குடிநீர் இல்லை. ஊரில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். தனியார் இடத்தில் விலை கொடுத்து வாங்கியும் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட பிளான்ட் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு கட்டடங்கள் சேதம்

முருகன், விவசாயி:தெற்குநத்தத்தில் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் வி.ஏ.ஓ., கட்டடம் இடிந்த நிலையில் உள்ளது. ரேஷன் கடையும் சேதமடைந்துள்ளது. இவற்றை இடித்து விட்டு புதியதாக கட்டடங்கள் கட்ட வேண்டும். நவீன சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும்.

கண்மாய் மடைகள் பழுது

அலெக்சாண்டர், விவசாயி: தெற்கு நத்தத்தில் உள்ள பெரிய கண்மாய் பராமரிப்பு இன்றி உள்ளது. மடைகள் சேதமடைந்துள்ளது. கனமழை பெய்து கண்மாய் நிறையும் போது, உபரி நீர் வெளியேறுவதற்குரிய மடைகள் சேதமடைந்துள்ளது. இதன் ஷட்டர்கள் பழுதாக உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !