அழகாபுரியில் ரோடு விரிவாக்கம்: நிழற்குடையின்றி அவதி
வத்திராயிருப்பு,: ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள அழகாபுரியில் ரோடு விரிவாக்க பணிக்காக பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.தற்போது அழகாபுரி வழியாக வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையிலும், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அதிகளவில் வாகனங்கள் வரும் நிலையிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது ரோடு விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.இதற்காக வத்திராயிருப்பு ரோட்டில் இருந்த பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டது. சில மரங்களும் அகற்றப்பட்டது. இதனால் தற்போது அப்பகுதியில் வெயிலின் தாக்கத்தால் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, வத்திராயிருப்பு ரோட்டிலும், ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டிலும் பயணியர் நிழற்குடை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.