ஸ்ரீவில்லிபுத்துார் - பரமக்குடி நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம்
சிவகாசி : ஸ்ரீவில்லிபுத்துார் - பரமக்குடி ரோட்டினை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர் பகுதி மக்கள் ராமேஸ்வரம் செல்வதற்கு மதுரை சென்று சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு மாற்றாக ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிவகாசி,- விருதுநகர்,- அருப்புக்கோட்டை, நரிக்குடி,- பார்த்திபனுார் வழியாக பரமக்குடி செல்லும் ரோட்டினை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிவகாசியில் பூவநாதபுரம் விலக்கிலிருந்து சாலை பிரிந்து சென்று எரிச்சநத்தம் ரோட்டில் நமஸ்கரித்தான்பட்டி அருகே கடந்து வடமலாபுரம் செக் போஸ்ட் அருகில் இணையும் வகையில் முதல் கட்டப்பணி நடைபெற உள்ளது. ரோடு சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, அதிகாரிகள் பார்வையிட்டனர். கோட்ட பொறியாளர் கூறுகையில், வரும் ஆண்டில் நிதி ஒதுக்கீட்டைப்பொறுத்து நான்கு வழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.