சூப்பர் ரிப்போர்ட்டர் விசிட் செய்தி
சாத்துார்: சேதமடைந்த ரோடு, வாறுகால் பஸ் ஸ்டாப் வசதியின்றி விளாமரத்துப்பட்டியில் மக்கள் அவதிப்படுகின்றனர்.வெம்பக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமரத்து பட்டியில் தெருக்களில் முறையான ரோடு, வாறுகால் வசதிகளில்லை. விளாமரத்துப்பட்டி பஸ் ஸ்டாப் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் கான்கிரீட்டுகள் உடைந்து குப்பைகள் நிறைந்த நிலையில் காணப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் போடப்பட்ட சிமெண்ட் ரோடுகள் கற்கள்பெயர்ந்து கால்களை பதம் பார்க்கிறது. வாறுகால் குப்பை நிறைந்து கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் அபாயம் உள்ளது.மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் செயல்பாட்டிற்கு வராமலேயே புதர் மண்டிய நிலையில் உள்ளது. குடிநீர் பற்றாக்குறை
சீனிவாசன், விளாமரத்துபட்டி: மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது இந்த குடிநீரும் போதுமான அளவில் இல்லை குடிநீர் பற்றாக்குறை காரணமாக வண்டிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். நிழற்குடை தேவை
செல்வக்குமார், விளாமரத்துபட்டி: விளாமரத்து பட்டி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. கம்பிகள் சேதமடைந்து சிமின்ட் பூச்சுகள் கீழே இடிந்து விழுந்து வருகின்றன. ஆபத்தை உணராமல் சிலர் இதில் காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். புதிய பயணிகள் நிழற்குடை கட்டவேண்டும். சுடுகாட்டு ரோடு சேதமடைந்துள்ளது.எந்த வசதியும் இன்றி அவதிப்படுகிறோம். கூடுதல் பஸ்கள் விடவேண்டும்
அ.லட்சுமணப்பெருமாள், விளாமரத்துப்பட்டி: சாத்துாரில் இருந்து ஏழாயிரம்பண்ணை வல்லம்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, விளாமரத்துப்பட்டி வழியாக வெம்பக்கோட்டைக்கு பஸ் விட வேண்டும். பஸ் வசதி மிகவும் குறைவாக உள்ளது. மினி பஸ் காலை மாலை மட்டுமே வருகிறது. பஸ் வசதியை மேம்படுத்த வேண்டும். துாய்மை பணியாளர்கள் வரவில்லை
மு.லட்சுமணன், விளாமரத்துபட்டி: வாறுகாலை தள்ள ஆட்கள் வருவது இல்லை. தீபாவளி,பொங்கலுக்கு வந்து சுத்தம் செய்கின்றனர். மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விடும் நிலையில் உள்ளது அதை அகற்ற வேண்டும். சுகாதார வளாகத்தை கட்டி திறக்காமல் விட்டுவிட்டனர் அரசின் நிதி வீணாகி வருகிறது. புதிய ரோடு சாக்கடை புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.