| ADDED : ஜூலை 20, 2024 12:12 AM
ராஜபாளையம் : யானை வழித்தடங்களில் ராஜபாளையம் அய்யனார் கோயில் பீட் ராக்காச்சி அம்மன் கோயில் பீட் பகுதிகளில் அனுமதி பெறாத சட்டவிரோத ரிசார்ட் உள்ளிட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும, என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வருக்கு அனுப்பிய மனுவில், ராஜபாளையத்தில் யானைகள் நடமாட்டம் குறித்து வேளாண் அதிகாரிகள், மாவட்ட வருவாய் துறையினர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை படி யானைகள் வயல் வெளிகளில் புகாமல் இருக்க அகழிகள், வேலிகள் அமைக்க வேண்டும். யானைகளை விரட்ட நவீன தொழில்நுட்பத்தோடு வன பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். பாதிப்படைந்த தென்னை, மா, பலா மரங்களுக்கு 50 வருட மகசூல் தொகையை மதிப்பிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். யானை வழித்தடங்களில் அய்யனார் கோயில் பீட் ராக்காச்சி அம்மன் கோயில் பீட் பகுதிகளில் அனுமதி பெறாத சட்டவிரோத ரிசார்ட் உள்ளிட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும். வனவிலங்குகள் இயற்கையாக தோப்புகளில் இறந்தால் விவசாயிகள் மீது பொய் வழக்குகள் போடக்கூடாது. புலிகள்,சாம்பல் நிற அணில் சரணாலயம் மத்திய அரசு நிதிகள் பெற்று விவசாயிகளின் விளை நிலங்களை காக்க வேண்டும். மாதந்தோறும் வனம் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பாதுகாக்க குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.