| ADDED : ஆக 20, 2024 06:54 AM
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் முழுமையாக தோண்டப்பட்ட குழிகளை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, அகல் விளக்கு, எலும்புகள், சங்கு வளையல்கள் என 1400க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவிர அதிக அளவிலான உடைந்த நிலையில் பழங்கால செங்கற்கள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் தோண்டப்பட்ட 8 குழிகளில் நான்கு குழிகள் முழுமையாக முடிந்து விட்டது. அந்த குழிகளில் மண் அடுக்குகளை பிரித்து அளவீடு செய்து ஆவணப்படுத்தப்படுகின்றது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகின்றது. அடுத்தடுத்து மழைக்காலம் என்பதால் முழுமையாக தோண்டி முடிக்கப்பட்ட குழிகளை ஆவணப்படுத்தும் பணி நடக்கின்றது. இதில் மண் அடுக்குகளை பிரித்து அளவீடு செய்யப்படும், என்றார்.