உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் இணைப்பு வழங்காததால் ரூ.10 ஆயிரம் இழப்பீடு

குடிநீர் இணைப்பு வழங்காததால் ரூ.10 ஆயிரம் இழப்பீடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை ஊராட்சி ஒன்றியம் லட்சுமியாபுரம் ஊராட்சியில் துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை மீண்டும் வழங்காததால், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரத்தை வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ, ஊராட்சி தலைவர், செயலர் வழங்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் லட்சுமிபுரம் ஊராட்சி சுண்டங்குளம் கிழக்கு தெருவில் வசிப்பவர் திலகராஜ், இவரது மனைவி மாலதி. இவர்கள் வீட்டுக்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் லட்சுமியாபுரம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுத்த நிலையில், இவரது வீட்டிற்கு இணைப்பு கொடுக்காமல் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இது குறித்து வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர், லட்சுமியாபுரம் ஊராட்சி தலைவர் ஆகியோரிடம் முறையிட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. மாறாக குடிநீர் இணைப்பு கொடுக்க முடியாது என ஊராட்சி தலைவர் மிரட்டி உள்ளார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கு புகார் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாலதி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆணையத்தின் சார்பில் ஊராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.இதுகுறித்து நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர்.இதில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒரு மாத காலத்திற்குள் முறையான குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி தண்ணீர் கொடுக்கவும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ 10 ஆயிரம், வழக்கு செலவு தொகை 5 ஆயிரத்தை 6 வார காலத்திற்குள் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பி. டி. ஓ., லட்சுமியாபுரம் ஊராட்சி தலைவர், செயலர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ