மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் மறியல் மாவட்டத்தில் 2312 பேர் கைது
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடுதல் உட்பட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 2312 பேர் கைது செய்யப்பட்டனர்.விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மத்திய அரசின் தொழிலாளர்கள் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடுதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உட்பட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எல்.பி.எப்., கவுன்சில் மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.இதில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் குருசாமி, ஏ.ஐ.டி.யு.சி., பாண்டியன், எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் ராஜசெல்வம், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் டெய்சி, மாவட்ட தலைவர் எஸ்தர்ராணி, சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகிகள் சாராள், பாண்டியன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 367 பேரை போலீசார் கைது செய்தனர்.*சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்து பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர். மறியலில் ஈடுபட முயன்ற 158 பேர், அருப்புக்கோட்டையில் 65 பேர் , பாலையம்பட்டியில் 60 பேர், காரியாபட்டி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். *ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் 115 பேர், சத்திரப்பட்டியில் சோமசுந்தரம் தலைமையில் 80 பெண்கள் உட்பட 143 பேர், சேத்துாரில் 20 பெண்கள் உட்பட 120 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மதியம் விடுவிக்கப்பட்டனர்.*சாத்துாரில் 130 பேர், வெம்பக்கோட்டையில் 32 பேர் , ஏழாயிரம் பண்ணையில் 38 பேரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமணத்தில் அடைத்தனர்.*வத்திராயிருப்பில் இந்திய கம்யூ.,முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துாரில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.