உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 8 மாதங்களில் பதிவான பதின் பருவ கர்ப்பம் 40 வழக்குகள்! குழந்தை திருமணத்திற்கும் 104 புகார்கள்

8 மாதங்களில் பதிவான பதின் பருவ கர்ப்பம் 40 வழக்குகள்! குழந்தை திருமணத்திற்கும் 104 புகார்கள்

மாவட்டத்தில் இன்றளவும் குழந்தை திருமணம் தவிர்க்க முடியாத தலைவலியாக உள்ளது. குழந்தை தொழிலாளர்கள் பிரச்னை போல் இதுவும் குறையாமல் உள்ளது. சில கிராமப்புறங்களில் பெண்கள் 16 வயது வந்து விட்டாலே பெற்றோர் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.இவ்வாறு நடத்தப்பட்ட பல திருமணங்கள் சைல்டுலைனுக்கு அக்குழந்தைகள் அளித்த புகார்கள் மூலமாகவும், சமூகநலத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் மூலமாகவும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024லிலும் இந்த பிரச்னை குறைந்தபாடில்லை.கிராமப்புறங்களில் பெரும்பாலும் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை 16 வயதில் திருமணம் செய்து வைப்பதும், 17, 18, 19 வயது என பதின் பருவத்தில் திருமணம் முடித்து வைப்பதும் ஒன்று தான்.இவர்கள் கர்ப்பமாகும் பட்சத்தில் ரத்த சோகையால் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். மாவட்டத்தில் கர்ப்ப காலத்தில் இறந்த பெண்கள் பெரும்பாலும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களாகவும், கிராமப்புறங்களை சேர்ந்தவர்களாகவும், பதின் பருவத்தில் திருமணம் செய்து கொண்டவர்களாகவும் உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே குழந்தை திருமணம் நடந்த கிராமங்களை கணக்கெடுக்க வேண்டும். இதில் மீண்டும் மீண்டும் குழந்தை திருமணம் நடந்த கிராமங்களில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். அதே போல் ஒரு முறை குழந்தை திருமணம் நடந்தாலும் அந்த கிராமங்களை சந்தேக வளையத்திற்குள் வைத்து அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.மேலும் ரத்த சோகையை தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வந்த இரும்பு பெண்மணி திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.2024 ஜன. முதல் ஆக. வரை 104 குழந்தை திருமண புகாரில் 79 நிறுத்தப்பட்டுள்ளன. 25 வழக்குள் பதியப்பட்டுள்ளன. அதே போல் பதின் பருவ கர்ப்பங்கள் 40 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஜூலையில் மட்டும் 14 வழக்குகள் போடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை