80 சதவீத அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை: உடற்கல்வி ஆசிரியர் காலி பணியிடத்தை நிரப்ப எதிர்பார்ப்பு
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் 80 சதவீத அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதான வசதி , 60 க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் காலிபணியிடங்களால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.மாவட்டத்தில் 159 நடுநிலைப் பள்ளிகள், 91 உயர்நிலை, 99 மேல்நிலை என 349 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் உயர்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களும், மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர்களும் பணியில் உள்ளனர். மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்த ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுதவிர கலைத்திருவிழா போட்டிகள், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.மாவட்டத்தில் உள்ள 190 உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் , உபகரணங்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் 60 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.மைதானம் மற்றும் உபகரணங்கள் இல்லாததால் கபடி, கோ-கோ, சிலம்பம் உள்ளிட்ட சில போட்டிகளுக்கு மட்டுமே மாணவர்களை தயார் படுத்த முடிகிறது என உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனை தெரிவிக் கின்றனர். தனியார் பள்ளிகளில் சிறு வயதில் இருந்தே மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்து போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகின்றனர். நடுநிலை பள்ளியில் வாரத்தில் இரு நாட்கள் விளையாட்டு வகுப்பு இருந்தும், உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் எந்தப் பயனும் இல்லாத சூழல் நிலவுகிறது.இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், உயர்நிலைப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரும். கூடுதலாக உள்ள 300 மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட வேண்டும். மேல்நிலை பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு மேல் இருந்தால் உடற்கல்வி இயக்குநர் நியமிக்க வேண்டும். ஆனால், தற்போது 700 மாணவர் களுக்கு மேல் இருந்தால் மட்டுமே உடற்கல்வி இயக்குநர் நியமனம் என விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், மேல் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற் கல்வி ஆசிரியர் மட்டுமே பணி புரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உபகரணங்கள் இல்லாதது மற்றும் காலிப் பணியிடங்களால் போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.