உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி பி.புதுப்பட்டியில் இரு ஆறுகள் இணையும் இடத்தில் தடுப்பணை

காரியாபட்டி பி.புதுப்பட்டியில் இரு ஆறுகள் இணையும் இடத்தில் தடுப்பணை

காரியாபட்டி: காரியாபட்டி பி.புதுப்பட்டி அருகே தெற்காறு, குண்டாறு இணையும் இடத்தில் அணைகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மிகவும் பின்தங்கிய முழுக்க விவசாயம் சார்ந்த பகுதி. நீர் ஆதாரமாக குண்டாறு, தெற்காறு, கிருதுமால் நதி இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் பெய்யும் மழை நீர் தெற்காறு, குண்டாறு வழியாக ஓடும். குண்டாற்றிலிருந்து வரத்து கால்வாய் ஏற்படுத்தப்பட்டு கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களில் மணல் அள்ளப்பட்டதால் ஆறுகள் பள்ளமாகி, வரத்துக் கால்வாய் மேடானதால் தண்ணீர் செல்லவில்லை. வீணாக கடலில் கலக்கிறது. இதனால் இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, உப்பு தண்ணீராக, சுவை மாறி வருகிறது. இதையடுத்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் காரியாபட்டி தோணுகால் அருகே தடுப்பு அணை கட்டப்பட்டது. பந்தனேந்தல், திருச்சுழி உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர் வரத்துக்கு வழிவகை செய்யப்பட்டது. அவ்வப்போது பெய்யும் மழை நீர் தடுப்பு அணையில் தேங்கி, கண்மாய்களுக்கு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதேபோல் தெற்காற்றிலிருந்து வரும் தண்ணீர் பி.புதுப்பட்டி அருகே குண்டாற்றில் கலந்து வீணாக வெளியேறி வருகிறது. இதனை தடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த, இரு ஆறுகள் இணையும் இடத்தில் அணை கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. மழை நீரை சேமிக்கும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, தண்ணீரின் சுவை மாற வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கிருந்து வரத்து கால்வாய்கள் ஏற்படுத்தி பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்பதால் அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ