வெம்பக்கோட்டை பட்டாசு ஆலையில் விபத்து; ஒருவர் காயம்
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை செவல்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு சொந்தமான சரவணா பட்டாசு ஆலை செவல்பட்டியில் உள்ளது. டி.ஆர்.ஓ., லைசென்ஸ் பெற்ற இந்த ஆலையில் அணுகுண்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது.அணுகுண்டு பட்டாசுக்கு மருந்து கலவை செய்யும் பணியில் சிவகாசி பேர்நாயக்கன்பட்டி கொங்கலாபுரத்தை சேர்ந்த ஜெயராமன் 37, ஈடுபட்டிருந்தார்.நேற்று மதியம் 1:00 மணிக்கு பட்டாசுக்கு மருந்து கலவை தயார் செய்து பட்டாசில் மருந்து செலுத்தி விட்டு உடலில் பட்டாசு மருந்து படிந்திருந்ததோடு ஆலைக்குள் உள்ள மாட்டு தொழுவத்திற்கு சென்று பீடி பற்ற வைத்துள்ளார்.இதனால் அவர் உடலில் தீப்பற்றியது.மேலும் மாட்டுத் தொழுவத்தில் வைத்திருந்த பட்டாசு கழிவுகள் மீதும் தீ பரவியது.அங்கிருந்த கழிவு பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் கட்டடத்திற்கும் கால்நடைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாட்டுத் தொழுவத்தில் தீ பரவியதை தொடர்ந்து தொழிலாளர்கள் தப்பி ஓடினர். வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த ஜெயராமன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.