நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் மண் மேவியதால் விபத்து அபாயம்
விருதுநகர் : விருதுநகர் நான்கு வழிச்சாலையில் புல்லலக்கோட்டை சந்திப்பிற்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் மண்மேவி உள்ளது. இதனால் டூவீலர்கள் விபத்து அபாயத்துடன் பயணித்து வருகின்றன.விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து புல்லலக்கோட்டை சந்திப்பிற்கு மதுரை ரோட்டை கடந்து செல்லும் சர்வீஸ் ரோட்டின் ஓரங்களில் அதிக அளவில் மண்மேவி உள்ளது.இந்த ரோட்டின் ஓரங்களில் ஏற்கனவே காலை முதல் இரவு லாரிகள் நிறுத்தப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் லாரிகள் நிற்கும் இடத்தை தவிர்த்து உள்ள குறுகலான பகுதி வழியாக பிற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் சேர்ந்துள்ள மண்ணை அகற்றாததால் சைக்கிள், டூவீலர்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து செயல்படுகிறது.இதனால் பலரும் மது அருந்தி விட்டு நான்கு வழிச்சாலையில் செல்லும் போது விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் மண்மேவிய இடங்களில் அவற்றை அகற்றி விபத்து அச்சத்தை போக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.