தொடர் மழையால் விவசாய பணிகள் விறு விறு
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மேக மூட்டத்துடன் மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் விறுவிறுப்பை எட்டியுள்ளது. ராஜபாளையம் சுற்று பகுதியில் கடந்த இரண்டு வாரம் முன்பு பெய்த மழைக்குப்பின் வெயிலின் தாக்கம் அதிகரித்தபடி இருந்தது. இதனால் நெல் சாகு படியில் ஈடுபட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர். அத்துடன் நான்கு நாட்களாக பலத்த காற்றும் சேர்ந்து வீசியதால் வயல்வெளிகளில் தண்ணீர் வேகமாக வற்றியதுடன் புதிதாக நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் வெயிலின் தாக்கம், வறண்ட காற்று இரண்டையும் தாங்க முடியாமல் கருக தொடங்கின. பருவம் மாதிரி அடித்த காற்றும், கடும் வெயிலும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேக மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இத்துடன் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவ துடன் மழைக்கான அறிவிப்பும் வெளியானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கண்மாயின் கடைமடை விவசாய பகுதி, கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் உழவு பணிகள், நிலத்தை பண்படுத்துவது, நடவுக்கு தயாராவது போன்ற விவசாய பணிகளை வேகம் எடுத்துள்ள னர்.