பராமரிப்பின்றி காணப்படும் பூங்கா
நகராட்சிகள் , ஊராட்சிகள் மூலமாக மக்களுக்கு பொழுதுபோக்கிற்காகவும், வாக்கிங் செல்வதற்காகவும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூங்காவும் 25 லட்சம் ரூபாய் செலவில் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சியும் மேற்கொள்ள வசதியாக இருந்தது.ஒரு சில பூங்காக்களில் நடை பயிற்சி செய்வதற்கு என தனியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பூங்காக்கள் பராமரிப்பு இன்றி போனதால் தொடர்ந்து அதை மக்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பெரும்பாலான பூங்காக்கள் முட்புதர்கள் சூழ்ந்தும் விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்தும் உள்ளன. இவற்றை பராமரிப்பதில் உள்ளாட்சிகள் மெத்தனம் காட்டி வருவதால், மக்கள் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில், ஊரில் உள்ள நான்கு வழி சாலை சர்வீஸ் ரோடுகள் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்கின்றனர்.நான்கு வழிச்சாலையில் நடை பயிற்சி செல்லும் பொழுது ஒரு சில சமயங்களில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. ரோட்டில் நடைபயிற்சி செல்பவர்கள் பயந்து கொண்டே நிம்மதியாக வாக்கிங் செல்ல முடியவில்லை. அருப்புக்கோட்டை நகராட்சி மூலமாக நகரின் ஆறு பகுதிகளில் தலா இருபது லட்சம் செலவில் பல ஆண்டுகளுக்கு முன்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இவை பராமரிப்பு இன்றி போனதால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மக்களும் வேறு வழியின்றி ரயில்வே ஸ்டேஷன், சர்வீஸ் ரோடுகளில் நடை பயிற்சி செல்கின்றனர். பூங்காக்களை மக்கள் பயன்படுத்துவதற்கும் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும்.