உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் காலை 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். வாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாலை ஆருத்ரா தரிசனமும், பரத நாட்டியம் நிகழ்ச்சியும் நடந்தது.*ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயிலில் 10 நாட்கள் மார்கழி திருவிழா கொண்டாடப்பட்டது. விழா நாட்களில் நடராஜர், அம்பிகை, மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையாருக்கு காப்பு கட்டி தினமும் மாலை பல்வேறு வகை அபிஷேகங்கள் நடந்தன. அலங்காரங்கள் முடிந்து தாண்டவ தீபராதனை மற்றும் மாணிக்கவாசகர் வேடமிட்டு திருவெம்பாவை பதிகங்கள் பாடப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பிரகாரங்களை சுற்றி வந்தார். திருவாதிரை களி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ராஜபாளையம் சொக்கர் கோயில், தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் உள்ளிட்ட ஆருத்ரா தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது.நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு ஹோமம் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் நடராஜருக்கு சந்தன காப்பு அலங்காரம் சாற்றப்பட்டு சிறப்பு ஆராதனை வழிபாடு நடந்தது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று அதிகாலை ஆருத்ரா தரிசன விழா நடந்தது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் மண்டபத்தில் உற்ஸவர் நடராஜர், அம்பாள் எழுந்தருள திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு திருவாதிரை களி படையல் செய்து வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். *திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் உற்ஸவர்களான நடராஜர், சிவகாமசுந்தரிக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், அரிசி மாவு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம் திருவாசகம் பாடலை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.*அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில், பாலவநத்தம் கோயில்களில் நடராஜருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்காரங்கள், பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ