மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விருது
காரியாபட்டி: மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வருபவர்களை கனிவுடன் பேசி விவரங்கள் சேகரிப்பது, நிலுவையில் இருந்த வழக்குகள் விரைந்து முடித்தது, புகார் மீது உடனடி நடவடிக்கை, வளாகத்தை சுற்றி அழகு செடிகள் வைத்து பராமரித்தது, அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தீவிரமாக கண்காணித்தது, நூலகம் அமைத்து வாசகர்களுக்கு வாசிப்புத் திறனை ஊக்குவிப்பது, அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏற்கனவே ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட அளவில் 2023ம் ஆண்டிற்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருதை காவலர் தினமான நேற்று டி.ஜி.பி. வெங்கட்ராமன் (பொறுப்பு) எஸ்.ஐ., மகேஸ்வரனிடம் வழங்கினார். விருது கிடைக்க பரிந்துரை செய்த எஸ்.பி., கண்ணன், வழிகாட்டியாக இருந்த அருப்புக்கோட்டை ஏ.டி.எஸ்.பி., மதிவாணன், இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோருக்கும், பிரதி பலனை எதிர்பாராமல் இரவு, பகல் என மக்கள் சேவையை சிறப்பாக செய்து வரும் உடன் பணியாற்றும் போலீசார் களுக்கும் எஸ.ஐ., மகேஸ் வரன் நன்றி தெரிவித்தார்.