காட்டுப் பன்றிகளால் வாழை சேதம்: விவசாயிகள் கவலை
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் வாழைக் கன்றுகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சிவகாசி அருகே திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி, ஆனைக்குட்டம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளில் தற்போது குலை தள்ளும் பருவத்தை எட்டி உள்ளது. தவிர ஒரு சில ஏக்கரில் தற்போது வாழைக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் காட்டு பன்றிகள் உணவிற்காக வாழை மரங்களை சேதப்படுத்துகின்றது. நடப்பட்ட வாழைக்கன்றுகளை வேரோடு சாய்த்து விடுகிறது தண்டுப் பகுதியில் உள்ள குருத்தினை சாப்பிடுவதற்காக மரத்தையே அழித்து விடுகின்றது. மேலும் புதிதாக நடப்பட்ட வாழைக் கன்றுகளை அழிக்கும் காட்டுப்பன்றிகள் இடையே ஊடுபயிராக நடப்பட்ட வெங்காய பயிரையும் நாசப்படுத்துகிறது. இரவு முழுவதும் கண்விழித்து காவல் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாமல்விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.