உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி மாநகராட்சியில் எந்த பணிகளும் நடக்க லஞ்சம்! கவுன்சிலர்கள் ஆவேசத்தால் அதிர்ந்த அதிகாரிகள்

சிவகாசி மாநகராட்சியில் எந்த பணிகளும் நடக்க லஞ்சம்! கவுன்சிலர்கள் ஆவேசத்தால் அதிர்ந்த அதிகாரிகள்

சிவகாசி நகராட்சி, திருத்தங்கல் நகராட்சி இரண்டும் சேர்க்கப்பட்டு 2021 ல் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த சங்கீதாவும், விக்னேஷ் பிரியா துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநகராட்சி அலுவலகத்தில் பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, வருவாய்த்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் உள்ளன. இந்நிலையில் அனைத்து துறைகளிலுமே ஊழல் நடக்கிறது. ஒவ்வொரு பணிக்கும் அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர் என கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., உட்பட பல்வேறு கட்சி கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். இதனால் கூட்டத்திலிருந்த அதிகாரிகள் முகம் வெளுத்து போனது. தீர்வை, தொழில், கடை உரிமம் புதுப்பித்தல், பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளான் அப்ரூவல் என எந்த தேவைக்கு அலுவலகத்திற்கு வந்தாலும் அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர். காலி மனை தீர்வைக்கு, ரூ. 15 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கின்றனர். பெயர் மாற்றத்திற்கு ரூ. பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை, வீட்டு தீர்வைக்கு அளவை பொறுத்து ரூ.50 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை பணம் கேட்கப்படுகிறது. பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் கடைசி வரை எந்த வேலையும் நடைபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமின்றி தி.மு.க, அரசு மேல் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்திரா தேவி, தி.மு.க., கவுன்சிலர், அலுவலகத்தில் எந்த தேவைக்கு வந்தாலும் பணம் இருந்தால் மட்டுமே வேலை நடக்கிறது. உதாரணமாக வணிக பயன்பாட்டு கட்டடத்திற்கு அப்ரூவல் பெறுவதற்கு ரூ. ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இதனால் சாமானியர்களுக்கு எந்தப் பணியும் நடப்பதில்லை. கடைசி வரை இழுத்தடிக்கப்படுகிறார்கள். இந்த பணத்தை அதிகாரிகள் நேரடியாக வாங்காமல் கீழ்நிலை பணியாளர்களை வைத்து வாங்குகின்றனர். சரவணன், கமிஷனர், கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மேற்பார்வையில் இருக்கும் சிவகாசி மாநகராட்சியில் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் தான் பணி நடக்கும் என்ற நிலைமை தி.மு.க. அரசுக்கே அவபெயரை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை