அரசு மருத்துவமனையில் உடைந்த கழிப்பிட கதவுகள், பூட்டிக்கிடக்கும் பொது வளாகங்கள்
விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவமனையில் தளங்களில் உள்ள கழிப்பிட கதவுகள் சேதமாகி உள்ளன. மேலும் பிணவறை அருகே உள்ள பொது சுகாதார வளாகங்கள் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.விருதுநகர் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டட பின் 6 தளங்களுடன் கூடிய மருத்துவமனை 2022ல் திறக்கப்பட்டது. இந்த கட்டடம் செயல்பாட்டுக்கு வந்த பின் நிறைய மருத்துவ வசதிகள், புதிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.இதனால் மக்கள் வருகை அதிகமாகி உள்ளது. மேலும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பிணவறை அருகே உள்ள பொது சுகாதார வளாகங்கள் செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றன. அதே போல் தளங்களில் உள்ள கழிப்பிடங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன.4வது மாடியில் உள்ள ஆண்கள் வார்டின் கழிப்பிடத்தில் கதவுகள் கழண்டும், சேதமாகியும் உள்ளன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நோயாளிகளை அழைத்து செல்லும் போதும் தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர்.எனவே பிணவறை அருகே செயல்படாமல் உள்ள சுகாதார வளாகங்களை செயல்படுத்தவும், சேதமான கதவுகளை சீரமைக்கவும், கழண்டு வரும் கதவுகளை பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.