காரியாபட்டி, கல்குறிச்சியை புறக்கணிக்கும் பஸ்கள்
காரியாபட்டி : காரியாபட்டி கல்குறிச்சியை சில அரசு, தனியார் பஸ்கள் புறக்கணிப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மதுரையில் இருந்து காரியாபட்டி, கல்குறிச்சி வழியாக அருப்புக்கோட்டைக்கு ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் இயங்குகின்றன. நான்கு வழிச்சாலை ஏற்படுத்துவதற்கு முன் காரியாபட்டி, கல்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி விடுவர். பயணிகள் எளிதில் குறித்த நேரத்திற்கு வெளியூர்களுக்கு சென்று வர முடிந்தது. இந்நிலையில் நான்கு வழிச்சாலை அமைத்தவுடன் ஒரு சில அரசு தனியார் பஸ்கள் காரியாபட்டி, கல்குறிச்சியை புறக்கணித்து நான்கு வழிச்சாலையில் செல்கின்றனர். ஒரு சில நேரங்களில் பஸ் கிடைக்காமல் நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது மட்டுமல்ல காரியாபட்டி, கல்குறிச்சியை சுற்றி உள்ள ஏராளமான கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அதுபோன்று கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்சை பிடிக்க முற்படுவர். குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களை தவறவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடுத்து நீண்ட நேரம் கழித்து வரும் பஸ்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.காரியாபட்டி, கல்குறிச்சிக்கு ஏறும் பயணிகளை டிரைவர், கண்டக்டர்கள் அவமதிக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க காரியாபட்டி, கல்குறிச்சியை புறக்கணிக்கும் அரசு, தனியார் பஸ்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்காணித்து டிரைவர், நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.