புதரான சாத்துார் மேலக்காந்தி நகர் ஓடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம்
சாத்துார் : சாத்துார் மேலக்காந்தி நகர் ஓடை புதர்மண்டி மழைகாலங்களில் கழிவுநீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாத்துார் கே.கே.நகர் , தில்லைநகர் பெரியார் நகர் மரிய ஊரணி பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் முழுவதும் அண்ணா நகர் ஓடை வழியாகவும் படந்தால் ஜங்ஷனில் இருந்து அண்ணாநகர் வரை உள்ள வாறுகால் வழியாகவும் மேல காந்தி நகர் ஓடையை வந்து அடைகிறது.12ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி அன்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக அண்ணா நகரில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தீபாவளியை கொண்டாட முடியாமல் மக்கள் தவித்தனர் . இதைத்தொடர்ந்து மேலக்காந்தி நகரில் இருந்த வாறுகால் அளவிலான சிறிய கால்வாயை துார்வாரி பெரிய மழை நீர் ஓடையாக மாற்றி அமைக்கப்பட்டது.உயரமான சுவர்கள் அமைக்கப்பட்டு ஓடையை விட்டு தண்ணீர் குடியிருப் புகளுக்குள் புகாதவாறு கட்டப்பட்டது. இந் நிலையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஓடை பராமரிக்கப்படாததால் தற்போது ஓடை முழுவதும் முள்செடியும் கொடி யும் படர்ந்து வளர்ந்து காடு போல உள்ளது.மேலும் இந்த ஓடைக்குள் குப்பை கழிவுகள் அதிகமான அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் மழைக்காலத்தில் ஓடையில் உள்ள முள் செடியில் குப்பைகள் சிக்கி அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும்.இதன் காரணமாக மீண்டும் அண்ணா நகர் பகுதியில் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. தற்போது ஓடையில் வளர்ந்துள்ள முள்செடியில் விஷ பூச்சிகள் அதிக அளவில் குடி இருக்கின்றன. இவை இரவு நேரத்தில் ஓடையில் இருந்து கிளம்பி மக்கள் நடந்து செல்லும் பாதையிலும் குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து விடுவதால் ஓடை அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது.குப்பை கழிவுகள் அதிகளவு தேங்கி இருப்பதால் ஓடையில் செல்லும் சாக்கடை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதோடு கொசு உற்பத்தியும் அதிகமாகஉள்ளது. மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக ஓடையை துார் வாரவும் குப்பைகளை அகற்றி சுகாதாரமாக ஓடைபராமரிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.