வரிச்சியூர் செல்வம் மீதான வழக்கு; விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார்; கூட்டாளியை எரித்து கொலை செய்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட 7 பேர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் நெருங்கிய கூட்டாளியான செந்தில்குமார் 38, மாயமான சம்பவத்தில், அவரது மனைவி முருக லட்சுமி 2021ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் விசாரணையில் இரட்டை கொலை வழக்கு ஒன்றில் செந்தில்குமாரால் தானும் போலீசில் சிக்கிவிட கூடும் என கருதி ஒரு கும்பல் மூலம் செந்தில்குமாரை சென்னையில் சுட்டுக்கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரியவந்தது. இந்த வழக்கில் 2023 ஜூன் 21ல் வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்து சாத்துார் ஜே.எம்.2. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளிவந்தார்.இந்த வழக்கின் விசாரணை மே மாதம் விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நடந்தபோது, இதனை ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது.அதன்படி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. காலை 10:20 மணிக்கு வரிச்சியூர் செல்வம், குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணகுமார், ஈஸ்வர் சாய் தேஜு, சதீஷ்குமார், லோகேஷ், சகாய டென்னிஸ் சரண் பாபு, பாலசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனைக்கு பின்னரே மக்கள் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கினை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தும், ஜூலை 14 அன்று அங்கு ஆஜராகுமாறு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.