குழாய் உடைப்பை சரி செய்ய ரசீது இன்றி வசூல்
தளவாய்புரம்:' செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் சாலை பணியின் போது உடைந்த குழாயை சரி செய்ய ரசீது இன்றி தலா ரூ.1000 வசூல் செய்வது குறித்து தி.மு.க., கவுன்சிலர் குற்றம் சாட்டினர்.செட்டியார்பட்டி பேரூராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். 12 வது வார்டு நாயுடு தெற்கு தெருவில் புதிய சாலை அமைக்கும் போது குடிநீர் குழாய் 36 இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து குடியிருப்பினர் கேள்வி எழுப்பிய போது புதிய சாலை அமைத்தவுடன் குழாய்கள் புதுப்பித்து தரப்படும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழாய் புதுப்பித்து இணைப்பு வழங்க தலா ரூ.1,000 வசூல் செய்ததுடன் இதற்கு ரசீது வழங்கப்படவில்லை. பணம் வழங்காத வீடுகளுக்கு இணைப்பு வழங்கவில்லை. இது குறித்து பேரூராட்சி தலைவர் ஜெயமுருகனிடம் 12 வது வார்டு கவுன்சிலர் மயில் அம்மாள் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். சாலை அமைக்கும் திட்ட மதிப்பீடு செய்யும்போது சேதமாகும் பொருட்களுக்கு மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் பணம் வாங்கப்பட்டது என தலைவர் மற்றும் பேரூராட்சி செயலர் தெரிவித்தனர். இதனால் கவுன்சிலர்கள் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.