நவ. 4 முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் கலெக்டர் தகவல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நவ. 4 முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும் என கலெக்டர் சுகபுத்ரா கூறினார். விருதுநகரில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக 2025 நவ. 4 முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும். வாக்காளர்கள் படிவத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதனுடன் எந்தவொரு ஆவணத்தையும் அப்போது இணைத்து வழங்கத் தேவையில்லை. வாக்காளர்கள் தங்களது பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தை கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத நபர்கள், தங்கள் குடும்ப நபர்கள், உறவினர்கள் பெயர்கள் 2002 பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தையும் குறிப்பிடலாம். கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெறுவது போன்ற பணிகள் 2025 நவ. 4முதல் 2025 டிச. 4 வரை நடக்கும். இக்காலத்தில் இதுவரை பெயர் சேர்க்கப்படாத நபர்களும் குடியிருப்பு இடம் மாறியுள்ளவர்களும், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பதற்கு முறையே படிவம் 6 மற்றும் 8ஏ அல்லது 8பி ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம். கணக்கெடுப்பு படிவங்களை கையொப்பமிட்டு அளித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 9ல் வெளியிடப்படும். மேலும் 2025 டிச. 9 முதல் 2025 ஜன. 8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோருதல், ஆட்சேபணைகள் தெரிவித்தல், திருத்தம் செய்யக் கோருதல் போன்ற படிவங்கள், கோரிக்கைகள் பெறப்பட்டு, அப்படிவங்களுடன், ஏற்கனவே பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் மீதும் 2025 ஜன. 31 வரை விசாரிக்கப்பட்டு பிப். 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும், என்றார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த முறைக்கு தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க.,வினர், நா.த.க.,வினர் ஆட்சேபணை தெரிவித்தனர். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான், நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா, தேர்தல் தாசில்தார் ரமணன் பங்கேற்றனர்.