வாக்காளர் திருத்த கால அட்டவணையை அறிவித்தவுடன் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் தகவல்
விருதுநகர் : எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை அறிவித்தவுடனே அதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்படும்,என கலெக்டர் சுகபுத்ரா கூறினார். இந்திய தேர்தல் ஆணையம் தற்போது நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கென சிறப்புத் தீவிரத் திருத்த(எஸ்.ஐ.ஆர்.,) பணிகளை செய்ய உத்தேசித்து இதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை செப். 10 புதுடில்லியில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான அனைத்துப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 100 வயதைக் கடந்த வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்த்தல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பெறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் உள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்யும் பணி, அவர்களது மாற்றுத்திறன் குறித்த விபரத்தைப் பதிவு செய்யும் பணி ஆகியவை தற்போது செய்யப்பட்டு வருகின்றன. மேலும்வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்புச் செய்யும் பொருட்டு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்களும் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் அப்பணிகளை செய்யும்வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் செய்யப்படவுள்ளது என கலெக்டர் சுகபுத்ரா கூறினார்.