வாசிப்பு பழக்கத்தை உருவாக்க காமிக்ஸ் புத்தகங்கள் உதவும்-- கலெக்டர் ஜெயசீலன் பேச்சு
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் இரண்டு நாட்கள் நடந்த சித்திரக் கதைகள் திருவிழாவில் பள்ளி குழந்தைகள், மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.இந்தியாவிலேயே ராஜபாளையத்தில் முதல்முறையாக குழந்தைகளுக்கான காமிக்ஸ் நுாலகம் திறக்கப்பட்டு மாணவர்கள் குழந்தைகள் பங்கேற்கும் விதமாக இரண்டு நாள் நிகழ்ச்சி நடந்தது. காமிக்ஸ் நுாலகத்தில் பள்ளி மாணவர்கள், குழந்தைகளுக்கு கார்ட்டூன் முக கவசம் தயாரித்தல், பொம்மலாட்டம், புனைவு கதை ஆடை அணிந்து நடித்தல், கதைகளுக்கு ஏற்ப சித்திரம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையொட்டி காந்தி கலை மன்றத்தில் சித்திரக் கதைகள் குறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், சினிமா இயக்குனர் சிம்பு தேவன், பதிப்பாளர் கலீல், லயன் காமிக்ஸ் விஜயன், பேராசிரியர் வில்வம், அரசு பள்ளி ஆசிரியர் சங்கர் ராம் கதையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்க காமிக்ஸ் புத்தகங்கள் உதவியாக இருப்பதுடன் இதனால் வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவும். அடுத்த மூன்று மாதங்களில் மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் காமிக்ஸ் நுாலகம் ஏற்படுத்தப்படும். பள்ளிகள், ஏற்கனவே உள்ள நுாலகங்களில் காமிக்ஸ் நுால்களுக்கான தனிப்பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.