நடைமேடை கூரை பணிகள் துவக்கம்
ராஜபாளையம்: தினமலர் செய்தி எதிரொலியால் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் 2வது நடைமேடையில் கூரை பணிகள் துவங்கியுள்ளது குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் சார்பில் 'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தில் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் நவீன வசதிகள் மேம்படுத்த 2022 டிச. மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. இதன்படி ரயில்வே ஸ்டேஷனில் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்துதல், லிப்ட், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, ரயில் நிலைய வடிவமைப்பு, நடைமேடைகளை மேம்படுத்துதல், நீண்ட கால தேவை அடிப்படையில் நவீன வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் தொடங்கின. இந்நிலையில் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனின் இரண்டாவது நடை மேடை மேற்கூரை அமைக்காததால் பயணிகள் வெயில் மழை நேரங்களில் ஒதுங்க வழியின்றி இருந்தனர். இது குறித்து படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம். இதன் எதிரொலியாக நடைமேடை கூரை பணிகள் துவங்கியுள்ளதால் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.