| ADDED : நவ 16, 2025 03:46 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்காவிற்கான கட்டுமானப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை வளாகத்தில் மொத்தம் ரூ.90 லட்சத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவ மனை வளாகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட ஆரம்பகால தலையீட்டு மையம் அருகே 2 ஆயிரம் சதுரஅடியில் ரூ.15 லட்சத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பூங்காவில் புலன் உணர்வு ஒலிக்கான ஒலி பலகைகள் உள்பட குழந்தைகளின் உணர்வு செயலாக்கக் கோளாறுகளை சிகிச்சை அளிக்க வடிவமைக்கப்பட்ட வசதிகளும், பூங்காவிற்குள் விலங்குகள் நுழைவதை தடுக்க சுற்றி தடுப்புகளும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் சிறப்பு குழந்தைகள், தங்கள் சூழலில் இருந்து புலன் தொடுதல், பார்வை, ஒலி, இயக்கம், உடல் விழிப்புணர்வு போன்ற பல்வேறு புலன்களைத் துாண்டி தகவல்களை செயலாக்கி பதிலளிக்கும் திறனை வளர்த்து மேம்படுத்த உதவும் வகையில் உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்கா அமைகிறது. தற்போது குழந்தைகளின் உணர்வு செயலாக்கக் கோளாறுகளை சிகிச்சை அளிக்க வடிவமைக்கப்பட்ட வசதிகளுக்கான பகுதிகள், சுற்றுச்சுவர் கட்டுமானம், தடுப்புகள் கட்டுமானப்பணிகள் துவங்கி நடக்கிறது.