நெல் விளையும் நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றுவது அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலை நீர் ஆதாரத்தை வைத்து ராஜபாளையம் சுற்று பகுதிகளில் கண்மாய்களும் நீர் நிலைகளும் அதிகம். நன்செய் பூமியாக உள்ள இவற்றைக் கொண்டு காலம் காலமாக நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது.எனவே மானாவரி விவசாய பகுதியை விட நெற்பயிர் விளையும் நன்செய் நிலங்களை விற்பனை செய்ய கூடாது என சட்டம் உள்ளது.இடுபொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி பொருட்கள் தகுந்த விலை கிடைக்காதது, கால நிலை மாற்றம், ஆட்கள் பற்றாக்குறை, குடும்ப தேவை, வாங்கிய கடனை அடைப்பதற்கு போன்ற காரணங்களால் விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.கண்மாய் ஒட்டி வளம் கொழிக்கும் இடமாக இருந்தும் ரியல் எஸ்டேட் துறையினர் பல மடங்கு விலை கொடுப்பது போன்ற ஆசை வார்த்தைக்கு மயங்குகின்றனர். அதில் சில பகுதிகளை விளைவிக்காமல் விட்டு பிளாட், வணிக வளாகங்கள், கட்டடங்கள் கட்டி விடுகின்றனர். இது போன்ற செயல்கள் ராஜபாளையம் புளியங்குளம், கடம்பன்குளம், கருங்குளம், கிருஷ்ணப்பேரி, செங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கண்மாய்களகளின் நன்செய் நிலங்களில் நடைபெற்று வருகிறது. அரசு விதிமுறைக்கு மாறாத விவசாய நிலங்கள்பிளாட்டுகளாக மாற்றக்கூடாது என்ற உண்மை தெரிந்தும் நடைபெற்று வரும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களால் அருகாமை பாசன விவசாயிகள் நீர் பாய்ச்ச முடியாமை, பாதுகாப்பு குறை, மனச்சோர்வு, அதிக விலைக்கு கேட்டு நிர்பந்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி விளைநிலங்களை பிளாட்டுகளாக மாற்றும் செயல் நீடித்தால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம்.விவசாயத்தை காக்கும்பொருட்டு மாவட்ட நிர்வாகம் இது போன்ற முறைகேடுகளை கண்காணித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் தடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.