5 ஆண்டுகளாக மகாசபை கூட்டம் நடத்தாத கூட்டுறவு சங்கங்கள்
சிவகாசி,; கூட்டுறவு சங்கங்களில் ஐந்து ஆண்டுகளாக மகாசபை கூட்டம் நடத்தவில்லை, என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். சிவகாசியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., பாலாஜி தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் ராமச்சந்திர ராஜா, ராஜபாளையம்: ஸ்ரீவில்லிபுத்துார் சரக கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நிர்வாக குழு கலைக்கப்பட்டு செயலாட்சியர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. செயலாட்சியர் நிர்வாகத்தின் கீழ் பேரவை கூட்டம் நடைபெறாததால் சங்க உறுப்பினர்களுக்கு ஈவுத்தொகை வழங்கப்படவில்லை. தணிக்கை அறிக்கை சான்று தரப்பட்டுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் பேரவை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.டி.ஓ., பாலாஜி: கூட்டுறவு சங்க இணை பதிவாளருடன் பேசி 15 நாட்களுக்குள் பேரவை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அம்மையப்பன், சேத்துார்: ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்துார் இடையே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கண்மாய், நீரோடைகளில் குப்பை கொட்டி தீ வைத்து எரிப்பதால் கண்மாய் மாசடைந்து சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆர்.டி.ஓ.,: ராஜபாளையம் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மையப்பன், வேப்பங்குளம்: புலிகள் காப்பக சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம், மேய்ச்சல் புறம்போக்கு நிலம் மற்றும் கண்மாய்களில் விதிமீறி செம்மண் அள்ளியது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு நியக்க வேண்டும். தேவப்பிரியம், அத்திகுளம்: அத்திகுளத்தில் விளை நிலத்தின் குறுக்கே புதிதாக அமைக்கப்படும் நான்கு வழிச்சாலையில் நீர்ப்பாசன கால்வாயில் புதிய குழாய் பதிக்க வேண்டும். கணேசன், வாடியூர்: வாடியூர் பகுதியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். பாலகணேஷ் மம்சாபுரம்: விவசாய பணிகளுக்குரிய இயந்திரங்களான தென்னை மட்டை துாளாக்கும் கருவி, மணல் அள்ளும் இயந்திரம் ,டிராக்டர்கள் போன்றவை விவசாய காலங்களில் உரிய நேரத்தில் கிடைக்க வேளாண் பொறியியல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளிடம் நில ஆவணங்களை பெற்றுக்கொண்டு இரண்டு மூடை யூரியா மட்டுமே வழங்குவதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்த போது வேளாண் துறை அதிகாரி விவசாயிகள் உரத்தைப் பெற்று வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக கூறினார். இதற்கு விவசாயிகள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ., பதிலளித்து பேசுகையில், விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு தாலுகா அளவிலான அனைத்து துறை அதிகாரிகளும் கண்டிப்பாக வரவேண்டும். குறைதீர் கூட்டத்தில் அளிக்கும் மனுக்களுக்கு பதில் அளிப்பதோடு நின்றுவிடாமல், பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித பாரபட்சம் இல்லாமல் உடனடியாக அகற்ற வேண்டும், என்றார்.